திங்கள், 20 ஆகஸ்ட், 2012

மன அழுத்தமும் விபத்தும்

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 
                       தினமலர் நாளிதழில் வெளியான செய்தி இது.



         ""மன அழுத்தம், குடி பழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி தவிக்கும், பஸ் ஓட்டுனர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்க, மாநகர போக்குவரத்து கழகம் முன்வந்தால், தேவையற்ற விபத்துகளை தவிர்க்க முடியும்,'' என, மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆய்வில் அதிர்ச்சி: சென்னையில், 3,461 மாநகரப் போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களை இயக்கும் பணியில், 8,988 ஓட்டுனர்களும், 8,943 நடத்துனர்களும் ஈடுபடுகின்றனர். இப்போக்குவரத்து கழகத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள், மதுபழக்கத்தில் சிக்கி தவிப்பதாக, ஏற்கனவே நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. குடும்பப் பிரச்னை, பணியின்போது அதிகாரிகளால் ஏற்படும் நெருக்கடி, வேலைப்பளு ஆகியவற்றால், மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளிட்டவைகளில் இவர்கள் சிக்கி தவிப்பதும் உள்ளது. மது பழக்கத்திற்கு இவர்கள் அடிமையாகியுள்ளதற்கு, இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
விதிகளை மதிப்பதில்லை: இது ஒருபுறம் என்றால், மறுபுறம் சில ஓட்டுனர்கள், கட்சி சங்கங்கள் ரீதியான பலம் பெற்றவர்களாக தங்களை கருதிக்கொண்டு, அதே மனநிலையில், போக்குவரத்து சிக்னல்களை மதிப்பதில்லை. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போதே, அதை மதிக்காமல் சர்வ சாதாரணமாக அந்த இடத்தை, மாநகர பஸ்கள் கடந்து செல்வதும், சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதுபோன்று, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும், மாநகர பஸ் ஓட்டுனர்களை பிடித்து, வழக்கு போட முடியாத நிலையில், போக்குவரத்து போலீசார் உள்ளனர். பல ஓட்டுனர்கள் பஸ்சை இயக்கும்போதே, மொபைல்போனில் பேசியபடி செல்வதால், கவனம் திசை திரும்பி, விபத்திற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.


பயிற்சி தேவை: எனவே, மன அழுத்தம், குடி பழக்கம், புகை பழக்கம், கவனக்குறைவு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி தவிக்கும், சென்னை மாநகர
போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உடனடியாக, புத்துணர்வு பயிற்சியையும், யோகா உள்ளிட்ட பயிற்சிகளையும் அளிக்க வேண்டியது அவசியமாகவுள்ளது.

இதுகுறித்து, சென்னை அரசு பொது மருத்துவமனை மனநல மருத்துவர்கள் கூறும்போது, "" ஓட்டுனர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் அதீத நம்பிக்கையே தேவையற்ற விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. இதுபோன்ற மன அழுத்தத்தை குறைக்க, அவர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை புத்துணர்ச்சி பயிற்சி அளிக்கலாம். போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியத்தை, அப்போது வலியுறுத்தலாம். விபத்தால் ஏற்படும் உயிரிழப்பால், மற்றவர் குடும்பம் மட்டுமின்றி, ஓட்டுனர்கள் குடும்பமும் பாதிக்கப்படும் என்பதையும், அவர்களுக்கு தெளிவுப்படுத்தலாம்,'' என்றனர்.

போதிய பராமரிப்பின்மையே விபத்துகளுக்கு காரணம்? போதிய பராமரிப்பின்மை மற்றும் தரமான உதிரி பாகங்களை பயன்படுத்தாதது போன்ற பல்வேறு காரணங்களால், அவ்வப்போது, அரசு பேருந்துகள் விபத்திற்குள்ளாவது தொடர் கதையாகிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்த, அரசு விரைவுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் தனியாகவும், பேருந்து தனியாகவும் சென்ற சம்பவம் நடந்தது. இதேபோல், சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட பேருந்துகள், அடிக்கடி மக்கராகி நிற்பதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு, பேருந்துகளில் தரமான உதிரிபாகங்கள் பயன்படுத்தாதது, தொடர் பராமரிப்பின்மை, அரசு போக்குவரத்து கழகங்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமிக்காதவை ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.

அனுபவம் உள்ளது: இதுகுறித்து, பேசிய சி.ஐ.டி.யு., தொழிற்சங்க தலைவர் சந்திரன், ""மாநகர பேருந்துகளை தொடர்ந்து சரியாக
பராமரிக்காததால் தான், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. ஒரு விபத்து நடந்தால், சம்பந்தப்பட்ட ஓட்டுனரை, தற்காலிக பணிநீக்கம் செய்கின்றனர். ஆனால், விபத்திற்கான காரணத்தை மறைத்து விடுகின்றனர். அந்த காரணத்தை கண்டறிந்து, மேற்கொண்டு நடக்காத வகையில், எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. அண்ணா சாலையில், விபத்துக்குள்ளான பேருந்து, ஐந்து ஆண்டு பழமையானது. அனுபவம் வாய்ந்த ஓட்டுனர் தான் பேருந்தை ஓட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமித்து, சரியாக பராமரிக்காதது தான் விபத்துக்கு காரணம்,'' என்றார். இருக்கையின் அவலம்: அரசு பேருந்துகளில், ஓட்டுனர்களின் இருக்கை பெரும்பாலும் "ஓயர்'களால் கட்டப்பட்டுள்ளன. நேற்று விபத்துக்குள்ளான மாநகர பேருந்தின் இருக்கை, வலுவாக பொருத்தப்படாமல், நைலான் கயிறால் கட்டப்பட்டிருந்தது. அதுவும், உறுதித்தன்மையுடன் இருக்கிறதா எனவும் சரிபார்க்கவில்லை. கயிறு அறுந்ததால், இருக்கை கவிழ்ந்தது விபத்துக்காரணம் என, ஓட்டுனர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பாலத்தின் உறுதித்தன்மை எப்படி? பாலத்தின் மீது மோதி, அரசு பஸ் கவிழ்ந்ததற்கு, பாலத்தின் உறுதியில்லாத் தன்மையும் காரணம் என கூறப்படுகிறது. பாலம் அடிக்கடி பராமரிக்கப்பட்டிருந்தால், பஸ் கீழே விழுந்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பாலங்களின் உறுதித்தன்மை குறித்து, நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: பாலத்தின் உறுதித்தன்மைக்கும், விபத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அப்பாலம், இன்னும் உறுதித்தன்மையுடன் காணப்படுகிறது. பஸ் ஓட்டுனர் குறிப்பிட்ட வேகத்தைத் தாண்டி, அதிவிரைவாக வந்துள்ளார். அதற்கு பாலத்தின் மீது குறை சொல்ல முடியாது. அதிவேகமாக மோதினால் எந்த பாலமும் உடையும் என்பது இயல்பானது. கூடவே, பஸ்சின் வேகத்தையும், கனத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பழைய பாலம், புதிய பாலம் என்ற வேறுபாடு பார்க்காமல் பராமரித்து வருகிறோம். பாலத்தின் உறுதித்தன்மை குறித்து, அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக