ஞாயிறு, 15 ஜூன், 2014

தண்ணீர் தொடர்ச்சி-02

                                  உலக அளவில் தண்ணீர்ப் பிரச்சினை;-
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.சுற்றுச்சூழல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
               நீர்வளம் என்பது வற்றாத,அள்ள அள்ளக்குறையாத அமுதசுரபி அல்ல.நீரைப் பயன்படுத்தும் விதத்திலேயே தண்ணீரின் தேவை நிறைவேறும்.
          தண்ணீரின் முதல் தேவை தாகம் தீர்ப்பது.இரண்டாவது தேவை உணவு,தானிய உற்பத்திக்கு ஆகும்.

 உலக அளவில் தண்ணீர்ப் பிரச்சினை;-
             உலக அளவில் தண்ணீரின் தேவை மிகுதியாகிக்கொண்டே போகிறது. முன்றில் ஒரு பங்கு மக்களுக்கு தகுதியான குடிநீர் கிடைப்பதில்லை.2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும்.ஆசியாவில் ஒரு மனிதனின் ஒருநாளின் தண்ணீர்ப் பயன்பாடு 1400லிட்டர் ஆகும்.அதுவே ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு மனிதனின் தண்ணீரின் பயன்பாடு ஒரு நாளைக்கு 4000லிட்டர் ஆகும்.தண்ணீர் நமக்கு பலவகைகளிலும் பயன்படுகிறது.ஒரு கிலோ தானியத்தை உருவாக்க ஆயிரம் லிட்டர் தண்ணீரும்,ஒருகிலோ மாட்டிறைச்சி உருவாக்க பதிமூன்றாயிரம் லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.
 தற்போதைய சூழல் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதும்,தொடர்ந்து நீரின்றி வறட்சி ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.எதிர்பாராத மழை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.தடுத்து நிறுத்த இயற்கைக்காடுகள் இல்லை.மலைகளில் 60 விழுக்காடு அடர் காடுகள் இருக்க வேண்டும்.காடுகள் அதாவது அதிலுள்ள தாவரங்கள் மழைநீரில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை சேமித்து ஆண்டு முழுவதும் தெளிவான தண்ணீரை மெல்ல,மெல்ல வழங்கி வந்தன.காடுகள் அழிக்கப்பட்டுவிட்டதால் திடீர் வெள்ளம் நாடு நகரங்களை அடித்து செல்கிறது.வளமான மண்ணை ஒரே மழையில் அடித்து செல்கிறது.மலைப்பகுதிகளில் நல்ல வளமான மண் உருவாக பத்தாயிரம் ஆண்டுகள் ஆகின்றன.மண் வளம் குறைந்தால் பயிர்வளம் குறையும்.உணவு உற்பத்தியும் குறையும்.
 இயற்கை ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.காற்றுமாசுபாடு ஓசோன் திரையைக்கிழிக்கிறது.கதிரவன் ஒளிக்கற்றை பூமியின் வெப்பத்தை மிகுதியாக்குகிறது.புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியைச் சென்றடைகின்றன.பனிமலைகள் உருகுகின்றன.துருவப்பகுதிகளில் 120க்கும் மேலாக பனிமலைகள் இருந்தன.ஆனால் தற்போது 40 பனிமலைகளே உள்ளன.
    (நன்றி;- World Water Council - The Hindu-19.3.2003)
தொழிற்புரட்சியின் பின்பு தண்ணீரின் தேவை மிகுதியாகிவிட்டது.தண்ணீர் மாசு அடைவதும் அதிகமாகி வருகிறது.எடுத்துக்காட்டாக ஒரு கிலோ தோலைப் பதப்படுத்த 25 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.ஒரு கிலோ துணிகளுக்குச் சாயம் ஏற்ற 80 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
(நன்றி;-வாழ்வின் ஆதாரம்-நீர்,சி,பி,ஆர்,பவுண்டேசன் வெளியீடு)
 அதே நேரத்தில் ஒரு தேக்கரண்டி பாதரசக்கழிவு 25 ஏக்கர் பரப்புள்ள ஒரு குளத்தை மாசுபடுத்திவிடும். 
  இந்தியாவின் நிலைமை;-
                 உலகத்தில் அதிக அளவு மழை பெய்யும் சிரபுஞ்சியில் ஆண்டுக்கு 1100செ.மீ.மழை பெய்யும் சிரபுஞ்சியில் ஒன்பது மாதங்கள் தண்ணீர்த்தட்டுப்பாடு.ஆனால் ஆண்டுக்கு 10செ.மீ. மழை பெய்யும் ராஜஸ்தான் மக்கள் தண்ணீர்த்தட்டுப்பாடு இல்லாமல் ஐந்து ஆண்டுகள்வரைகூட தண்ணீரைப்போற்றிப்பாதுகாத்து வருகின்றனர்.
இந்தியா மழைவளம் நிறைந்த நாடு.ராஜஸ்தான் போன்ற சில பகுதிகளைத்தவிர மற்ற பகுதிகளில் மழையளவு குறையவில்லை.
           அப்படியானால் ஏன் அடிக்கடி வறட்சியும், பஞ்சமும் ஏற்படுகின்றன.வறட்சியும்,பஞ்சமும் இயற்கையானதா?அல்லது நாமே உருவாக்கிக்கொண்டதா?
 பத்து செ.மீ. மழை பெய்தால் ஒரு ஹெக்டேர் பரப்பில் கிடைக்கும்தண்ணீரின் அளவு 10இலட்சம் லிட்டர் தண்ணீர்.ஒரு ஆண்டுக்கு உரிய அதாவது 8760 மணி நேரத்திற்கு உரிய தண்ணீர் வெறும் 100 மணி நேரத்தில் இந்தியா தன் தேவைக்கான தண்ணீரைப்பெற்று விடுகிறது.அனைவரும் சிந்திக்கவேண்டும்.
 கங்கை,யமுனை,காவிரி என வற்றாத ந்திகள் பாயும் வளமான நாடு நமது பாரதம்.நீர் வளமும் நிலவளமும் இருப்பதைக்கண்டு வெளிநாட்டவர் வியந்து போற்றினர்.ஆனால் தற்போது நிலைமையே தலைகீழாகி வருகிறது.
 வான் பொய்ப்பினும் தான் பொய்யாக்காவிரிதாய் தற்போது நீரில்லை! என கையை விரிக்கிறாள்.கங்கையும்,காவிரியும் இணைத்துவிட்டால் நமது கனவு பலிக்கும் என பலர் நம்புகின்றனர்.இந்தியா மழைவளம் மிக்க நாடு.இந்திய மக்களின் குடிநீர்த்தேவையை நிறைவு செய்யவேண்டும்.
 தண்ணீர் தேவை மிகுந்து வரும் இக்கால கட்டத்தில் இந்தியாவின் ஏதாவது ஒரு ஆற்றின் பெயரைச்சொல்லுங்கள்.கங்கை,யமூனை,கோதாவரி,காவிரி, என்று.அந்த ஆறு புனிதமானது.தூய்மையானது.அதில் குளித்தால் நோய் நீங்கும்.என்றெல்லாம் சொல்லி வந்த காலம் பொய்யாகிவிட்டது.தற்போது ஆறுகள் உட்பட ஏரிகள்,குளங்கள் போன்ற நீர்நிலைகளும் மாசுபட்டு உள்ளன.நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது.
தமிழகத்தில் பவானி,பாலாறு,நொய்யல்,காவரி அனைத்தும் மாசுபட்ட நீரை சுமந்து செல்கின்றன.காவரியை,கங்கையை தூய்மைப்படுத்த என பல திட்டங்கள் உருவாகின்றன.ஆனால் சமூகவிரோதிகள் ஆற்றின் ஒருபுறம் தூய நீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.மறுபுறம் மாசுபட்ட கழிவுநீரைக் கலக்கி விடுகின்றனர்.தட்டிக்கேட்கும் பலத்தை இழந்துநிற்கும் நமக்கு குடிநீரின் தேவையும் முக்கியத்துவமும் புரிய வேண்டும்.மக்களனைவரும் விழித்தெழ வேண்டும்.அரசாங்கத்தை தட்டி எழுப்ப வேண்டும்.தண்ணீர் தட்டுப்பாடும்,மாசு அடைவதும் மாபெரும் பிரச்சினையாக  உருவெடுத்து வருவதை, குடிநீர் கிடைக்காமல் இறந்து போகும் நிலை உருவாவதை தடுக்க வேண்டும். மழை இப்போதும் பெய்துகொண்டுதான் இருக்கிறது.மனித மனங்கள்தாம் மாறி வருகின்றன.தண்ணீர் விற்பனைப்பொருளாக மாறி வருவது வேதனைக்குரியது.தண்ணீர் சமுதாயத்தின் பொதுச்சொத்து.இதை நேர்மையாக,மாசுபடுத்தாமல்  முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 
    உலகளவிலே சிந்தித்து உள்ளூரிலே செயல்படுக என்ற சுற்றுச்சூழல் அறிஞர்களின் கருத்தினை உணரவேண்டும்.உலக அளவில்  பூமி வெப்பம்,ஓசோன் அழிவு,மழை குறைவு,வெள்ளம்,வறட்சி போன்றவை.இந்திய அளவில் ஆறுகள் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடினாலும் தண்ணீர் தட்டுப்பாடு,மாசுபாடு ஆகியவை பற்றி சிந்திக்க வேண்டும்.
 
தொடரும்.(2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக