சத்தியமங்கலம் வனக் கோட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல்
தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, புலிகள் காப்பக
உத்தரவு முழுமையாக அமலாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதியதாக
உருவாக்கப்பட்டுள்ள தலமலை, கேர்மாளம் வனச் சரகங்களுக்கு எல்லைகள்
வரையறுக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனகோட்டத்தில் வன விலங்குகள்
வசிப்பதற்கேற்ற சூழல் உள்ளது. அதனால், சத்தியமங்கலம் வனக் கோட்டம் கடந்த
2008-ஆம் ஆண்டு வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்,
ஆண்டுதோறும் நடைபெற்ற வனவிலங்குகள் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை
அதிகரித்ததையடுத்து தமிழக அரசின் பரிந்துரையின் பேரில், சத்தியமங்கலம் வன
உயிரின சரணாலயத்தை புலிகள் காப்பகமாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்
துறை அமைச்சகம், கடந்த 1-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, சத்தியமங்கலம் வனக்
கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஆசனூர், சத்தியமங்கலம் வனக் கோட்டமாக
உருவாக்கப்பட்டது. தற்போதுள்ள 5 வனச் சரகங்களில் இருந்து சில பகுதிகள்
பிரிக்கப்பட்டு தலமலை, கேர்மாளம் என மேலும் 2 வனச் சரகங்கள் புதியதாக
அமைக்கப்பட்டுள்ளன.
பவானிசாகர் வனச் சரகத்திலிருந்து ஒண்ணத்திட்டு, தலமலை, பெஜலட்டி காவல்
பகுதிகளுக்கு உள்பட்ட 11476.92 ஹெக்டேர் பரப்பளவுள்ள வனப் பகுதி தலமலை
வனசரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆசனூர் வனச் சரகத்திலிருந்து கேர்மாளம் கிழக்கு, கேர்மாளம் மேற்கு,
கெத்தேசால், காடட்டி, கோட்டமாளம் காவல் பகுதிகளுக்கு உள்பட்ட 18032.59
ஹெக்டேர் பரப்பளவுள்ள வனப் பகுதியும், தாளவாடி வனச் சரகத்திலிருந்து
பெனக்கனஹள்ளி தெற்கு, வடக்கு காவல் பகுதிகளும் கேர்மாளம் வனச் சரகத்துடன்
இணைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, பவானிசாகர் வனச் சரகத்தின் பரப்பளவு 35,719
ஹெக்டேரிலிருந்து 24,242 ஹெக்டேராகவும், ஆசனூர் வனச் சரகத்தின் பரப்பளவு
28,845 ஹெக்டேரிலிருந்து 16,486 ஹெக்டேராகவும், தாளவாடி வனச் சரகத்தின்
பரப்பளவு 28,553 ஹெக்டேரிலிருந்து 22,880 ஹெக்டேராகவும் குறைந்துள்ளது.
சத்தியமங்கலம், டி.என்.பாளையம் வனச் சரக எல்லைகளில் மாற்றங்கள் ஏதும்
செய்யப்படவில்லை.
நன்றி; தின மணி நாளிதழ்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வனத்துறையினர் எடுத்த கணக்கெடுப்பின்படி 15
புலிகள் இருந்தது. அடுத்த ஆண்டு அது 18 ஆக உயர்ந்து தற்போது 30 புலிகளாக
உயர்ந்தது. ஆனால் அப்பகுதியை சேர்ந்த வன ஆர்வலர்கள் கூறும்போது, சத்தி
வனப்பகுதியில் எப்படியும் குறைந்தது 50 புலிகள் இருக்கக்கூடும் என்று
கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக