சனி, 28 ஜூன், 2014

உலகஅளவில்பூமிவெப்பம்,ஓசோன்அழிவு,மழைகுறைவு,வெள்ளப்பெருக்கு,வறட்சி போன்றவை பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றன.இந்திய அளவில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடினாலும் தண்ணீர் தட்டுப்பாடு,மாசுபாடு ஆகியவை கவலைதரும் விசயமாக உள்ளது.
                                 
                   இன்றுபல்வேறுஆலைக்கழிவுகள்,மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி,என ஊர்கள் பெருக்கத்திற்க்கேற்ப சாக்கடைக் கழிவுகள் ஆறுகளில் கலந்து மாசுபட்டு வருகின்றன.நகரங்களில் குடியிருப்புகள் பெருகி வருகின்றன.குடியேறிய பகுதிகளில் காற்றும் மாசுபட்டு வருகிறது.தண்ணீரும் மாசுபட்டு வருகிறது.குப்பைகளும் பெருகி வருகின்றன.
              குறைந்த ஆழத்தில் கிடைத்துவந்த நிலத்தடி நீர் இப்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டு ஆயிரம் அடி ஆழத்திற்கு ஆழ்துளைக்கிணறு அமைத்தாலும் நிறைவாய்,தூயதாய் தண்ணீர் கிடைப்பதில்லை.
                   வீட்டு முற்றங்களும்,சுற்றுப்பகுதிகளும் கான்கிரீட் தளங்களால் மூடப்பட்டு அதனால் மழைநீரும் வீணாக ஓடி சாக்கடையில் கலந்து சென்றுவிடுகிறது.எல்லா வசதிகளும் படைத்த இந்த வீடுகளில் தண்ணீர் மருந்துக்கும் கிடைப்பதில்லை.வசதி படைத்தவர்கள் தண்ணீரை லாரி போன்ற வாகனங்களில் விலைக்கு வாங்கிக்கொள்கின்றனர்.
                மழைநீரை சேமிப்பதே சிறந்தது.
                                      
                    தொழிற்புரட்சி காரணமாக தோல் தொழிற்சாலை,காகிதத்தொழிற்சாலை,சாயத்தொழில், என பல்வேறு தொழிற்சாலைகள் பெருகின.அத்துடன் அந்த ஆலைகள் ஆற்றங்கரைகளில் அமையவும்  அனுமதி பெற்றன.ஆற்றுநீரை உறிஞ்சி எடுத்தும்,ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீரை உறிஞ்சி ஆலைகளுக்கு பயன்படுத்தினர்.இதனால் நிலத்தடி நீர் குறைந்தது.ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலந்து,நிலத்தடிநீரில் கலந்து மாசுபட்ட தண்ணீரையே அப்பகுதி மக்கள் குடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

                          கடந்த ஐம்பது ஆண்டுகளில் விவசாயப்புரட்சி என்னும் பெயரில் செயற்கை உரங்களும்,செயற்கை விதைகளும் பயன்படுத்தப்பட்டது.இதனால் தண்ணீரின் இயற்கைத்தன்மை கெட்டது.மண் உவர்ப்பாக மாறி மாசு அடைந்தது.உயிர்த்தன்மை இழந்ததால் பயிர்வளம் கெட்டது.செயற்கை விதை மற்றும் செயற்கை உரங்களினால் தண்ணீர் தேவை மிகுதியானது. தண்ணீர்  மிகுதியாக தேவைப்படும் பயிர்களான நெல்,கோதுமை,கரும்பு பயிரிடப்பட்டன.கம்பு,சோளம்,கேழ்வரகு,சிறுதானியங்கள் பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்தது.

                            தண்ணீர் தேவை மிகுதியால் பற்றாக்குறை காரணமாக மாநிலங்களுக்கிடையே போட்டி அதிகமானது.ஆங்காங்கே ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதும்,அடுத்த மாநிலங்களுக்கு தண்ணீர் தர மறுப்பதும் அன்றாட நிகழ்ச்சி ஆகி விட்டது.பூச்சிகளை மனிதனின் எதிரியாக நினைத்து அதனை அழிக்க மருந்து என்ற பெயரில் பூச்சிக்கொல்லிகளை அடித்தனர்.வயல்களில் நஞ்சு கலந்தன.உணவுச்சங்கிலி விளைவால் பூச்சிக்கொல்லி மருந்தின் நஞ்சானது பல்வேறு இடங்களுக்கும் பரவியது.

                        நாகரீக உலகில் குடியிருப்புகளுக்கு தண்ணீரின் தேவை மிகுதியானது.கழிவறைகளுக்கு விலைமதிப்பற்ற குடிநீரை பயன்படுத்துகிறோம்.ஒரேமுறை பயன்படுத்தப்பட்டு சாக்கடையில் செலுத்துகிறோம்.சுமாராக நான்கு பேர் கொண்ட வீடு ஒன்றிற்கு ஆண்டிற்கு 90,000லிட்டர் தண்ணீர் கழிவறைக்கு பயன்படுத்தப்படுகிறது.துணி துவைக்க,பாத்திரம் கழுவ,குளிக்க என ரசாயனக்கலவை சோப்புகளும்,பாஸ்பேட் அதிகம் கொண்ட டிடர்ஜென்ட் துவக்கும் சோப்புகளும்,நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் பொருட்களும் பயன்படுத்தி தண்ணீரை மாசுபடுத்துகிறோம்.

                        ஆறுகள் இயற்கையாக ஓடி கடலில் கலப்பதை தடுக்கப்பட்டு இயற்கை சுழற்சி முறைகள் தடையாகின.கடல் குப்பை கொட்டும் இடமாக மாறிவருகின்றது.அணு சோதனை நடத்தும் இடமாக மாறிவருகிறது.ஆலைக்கழிவுகளும்,பாதரசக்கழிவுகளும்,சாக்கடைநீரும் கலக்கும் இடமாக கடல் மாறிவிட்டது.அணுக்கழிவுகளும்,அனல்மின் சாம்பல்,பெட்ரோலியக்கழிவுகள் கடலில் கலக்கின்றன.பெரிய கப்பல்களில் பெரிய வலை கொண்டு மீன் பிடிக்கப்படுகின்றன.பவளப்பாறைகள்,முத்து,அரிய கனிமங்கள் என கடல் வளம் அனைத்தும் மனிதனால் சுரண்டப்படுகின்றன.
    
தண்ணீர் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை.தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.மாசுபடாமல் காப்போம்.

                   மனிதன் வாழ்வதற்கான இடம் பூமி ஒன்றே!.இதில் அமைந்துள்ள இயற்கை வளங்களும் குறிப்பிட்ட அளவுதான் உள்ளன.எனவே புதுப்பிக்கும் ஆற்றல் வளங்களான சுயற்சிமுறையில் கிடைக்கும் காற்றையும்,தண்ணீரையும் நேர்மையான வழியில்,சிக்கனமாக அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
                 காற்று மாசுபடும் தொழில்களுக்கு எதிராக குரல் கொடுப்போம்.பசுமை இல்லத்தில் வெளியாகும் தீய காற்று ஓசோன் படலத்தை ஓட்டையாக்கும்.அதனால் புற ஊதாக்கதிர்கள் நம்மை தாக்கும்.பூமி வெப்பம் மிகும்.மழைவளம் குறையும்.
                மழை இப்போதும் பெய்துகொண்டுதான் இருக்கிறது.மனித மனங்கள்தாம் மாற வேண்டும்.
     தண்ணீர் சமுதாயத்தின் பொதுச்சொத்து.தண்ணீரை மாசுபடுத்தாமல் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக